இந்திய வரலாற்றின் மேன்மையான பக்கங்களையும் தமிழக வரலாற்றின் முழுமைக்கான பகுதியை நிறைவு செய்யும் மூலங்களையும் அதிக அளவில் கொண்டிருக்கும் பகுதி தகடூர்.

இந்திய வரலாற்றில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது இந்திய தென்கோடி மக்களான தமிழர்களான நமது ஆதங்கம். இந்த புறக்கணிக்கப்பிற்குப் பின்னாலுள்ள அரசியலும் உதாசீனமும் வெளிப்படையானது மட்டுமல்ல சூழ்ச்சிகளும், ஆழ்ந்த வெறுப்புகளும், வக்கிரங்களும் அடையாளமாகும் இடமும் கூட. எழுதும் பொது ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றின் திரிந்தநிலை வெளிப்பாடுகள் பொறுப்பின்மையான தருணங்களையும் சுயவிருப்பு வெறுப்புகளையும் அதனுடனே வெளிப்படுகின்றன என்ற அவதானிப்பும் நம்மிடை உண்டு.

இந்த ஆதங்கத்தின், அவதானிப்பின் குரலில் பொதிந்திருக்கும் உண்மையை தமிழக வரலாற்றில் தகடூர் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற வட தமிழக மக்களான எம்மிடமிருந்து எழுவதிலிருந்தும் அடையமுடியும்.

அதேசமயத்தில் எந்த ஒன்றின் முழுமையான வரலாறும் ஒரு நூலில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது புகழ்வதும் உயர்த்திக் கூறும் செயல் மட்டுமே. இந்த சுயஉணர்வு எங்களை தொடர்ந்து இயங்கச்செய்கிறது.

புதிய அறிதல்கள், புதிய கண்டுபிடிப்புகள், மறுவாசிப்புகள், விடுபட்டவைகளின் அடையாளங்கள், மறைக்கப்பட்டவைகளின் மீட்சி இன்னபிற காரணங்களால் வரலாற்றின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது; புதிய வெளிச்சம் பெறுகிறது; ஒருசில தருணத்தில் இன்றைய கூசவைக்குக் வெளிச்சம் ஒளி மங்கிப்போகிறது.

பெருகும் ஒளிக்கு ஈடுகாட்டமுடியாத நிலையும் மங்கும் ஒளியை ஏற்கமுடியாத மனமும் மூலங்களையும் புதியகண்டுபிடிப்புகளையும் மறைக்கிறது; அழிக்கவும் முனைகிறது. புறக்கணிப்புஅரசியல், உதாசீனம் சூழ்ச்சி, ஆழ்ந்த வெறுப்பு, வக்கிரம், திரிந்தநிலை வெளிப்பாடு பொறுப்பின்மையான தருணம், சுய விருப்பு வெறுப்பு ஆகிய எல்லாவறையும் விட இந்நிலை ஆபத்தானது. இந்த ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளோமா என்ற உணர்வே நிகழ்வுகளின் மீது ஐயத்தை தவிர்கமுடியாது கட்டமைக்கிறது.

ஒருசில தவிர தகடூர் குறித்த இந்நாள் வரையிலான வரலாற்றுப் பதிவுகள் இந்த ஐய்யத்தை தொடர்ந்து எழுப்புகிறது. இந்த ஐயத்தை சுயமறுபரிசீலனை செய்து இந்த உணர்வு கட்டமைத்த செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய விரும்பினோம். சில வெளிச்சமாயின. அவை எங்கள் செயல் திட்டத்திற்கு அடித்தளமாகியுள்ளன. இந்த அடித்தளத்தின்மீது வலுவாக நிற்க திட்டமிட்டுள்ளேம்.

இந்த பின்புலத்தில் தகடூர். காம் எந்த பிரகடனத்தையும் கொண்டிருக்கவில்லை. முதல் வரிகளில் குறிப்பிட்ட இந்தியா வரலாற்றின் மேன்மையான பக்கங்களையும் தமிழக வரலாற்றின் முழுமைக்கான பகுதியை நிறைவு செய்யும் தகடூர் மூலங்களை உலகம் அறியச்செய்வதும் காலமுறைப்படுதுவதும் அவற்றின் மீது உரிய வெளிச்சம் படரச்செய்வதும் முதன்மை நோக்கம்.

ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.