பகடு புறந்தருநர் பாரமோம்பி

குடி புறந்தருகுவை யாயினின்

அடி புறந் தருகுவ ரடங்காதோரே .,

 

என்ற புறப்பாடல் போர்ப்படையைக்காட்டிலும் வேளாண் படைச்சிறப்பையும் ஏர் பிடித்து உழும் வேளாளனின் வெற்றியே ஓர் மன்னனின் வெற்றி என்றும் போற்றுவதைக் காணலாம்.

1.   நீர் நிலைகளைப் பெருக்கி உணவு உற்பத்திக்கு வழிதேடும் மக்களே அணைவரிலும் சிறப்பு மிக்கவராய் கருதப்பட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பர். அதற்கேற்ப உணவு என்பது நிலமும் நீரும் இணைந்தது. அத்தகு நிலத்தின் பிள்ளைகளாய், வளமைக்கு வித்திடுபவராய் போற்றி புகழப்படும் இவர்கள் வேளாளர் என அழைக்கப்பட்டனர். ஆட்சிபுரிகின்ற மன்னர்களுக்கு பக்க பலமாக திகழ்ந்தவர்கள் வேளாளர்கள். இவர்கள் பல கிளைத்தொழிலில் ஈடுபட்டனர்.

2. நிகண்டுகள் இவர்கள் ஆறு வகையான தொழில்களை மேற்கொண்டதாக சுட்டுகின்றது.

உழவுத்தொழிலை அடுத்து வணிகத்திலும் பங்கேற்றனர். பாண்டியர், சோழர், போன்ற பேரரசர்களின் அரசவைகளில் உயர் பதவிகளையும் வேளாளர்கள் வகித்தனர்.

போர்த் தளபதியாகவும் பணியாற்றினா.; இவ்வாறு பல்லாற்றானும் சிறப்பு பெற்று பல தொழில்களைக் கற்றறிந்தவர்கள் வேளாளர்கள். நாகரீக உலகில் முதன்முதலாக தோன்றிய தொழில் வேளாண் தொழிலே. இத்தகைய வேளாளரில் உழவுத் தொழிலையே தங்களது முழுநேரத் தொழிலாகவும், அதற்கு பயன் படுத்தப்;படும் ஏர்கலப்பையையே தங்களது குல தெய்வமாகவும் வைத்து போற்றி புகழ்ந்து வந்த ஒரு பிரிவினரை சித்ரமேழிநாட்டார் என அழைக்கப் பட்டனர்.

 

சித்ரமேழி நாட்டார் :   பூமி தேவியின் மக்கள் நாங்கள் என்றும் ஏரையே தெய்வமாகக் கொண்டவர்களை சித்ரமேழி நாட்டார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் 79 நாடுகளில் வாழ்ந்தனர் என்றும் தமிழகத்தில் சீரும் சிறப்புமாய் திகழ்நதனர். இவர்கள் அறம் வளர, கற்பமைய, புகழ் பெருக மனு நெறி தலைக்க நல்லவற்றையே நடைமுறைப்படுத்துபவர்கள் என கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

 

3. சித்ரமேழி நாட்டார் மெய்க்;கீர்த்தி : மன்னர்களுக்கு அமைக்கப்படும் மெய்க்கீர்த்தியைப் போன்றே சித்ரமேழி நாட்டார்களுக்கும் மெய்க்கீர்த்தி அமைத்து

கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சோழ மன்னன் ராசாதிராசன் காலத்தில் திட்டக்குடியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் அரசனின் மெய்கீர்த்திக்குப் பின்னர் இவர்களது புகழ்பாடும் மெய்க்கீர்த்தி வருகின்றது.

“ ஸ்ரீமத் பூமி சபுத்ஸ்ய

சாதுர்வர்ணஸ குலோத்பவம்

சர்வலோக   கிதார்த்தாய

சித்ர மேளஸ்ய சாஸனம்’’ எனத் தொடங்குகின்றது.

 

4. சித்ர மேழி நாட்டாரின் மெய்கீர்த்திகளில் மூன்று மாறுபாடுகள் காணலாம். சில மெய்க்கீர்த்திகளில்

மேழியை தெய்வமாகவும், மேழியை பிடித்து உழுபவர்கள் என்றும் பொருள்பட உரைக்கின்றன. சிலவற்றில் பசும்பையை அதாவது பொன் பொருளை வைத்து உழவை துவக்குபவர்கள்   என குறிக்கின்றன. இவர்களை வணிகர்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.   நன்கு உயர்ந்த   நிலையை அடைந்தவர்கள் அறங்கூறும் தொழிலைக் கைக்கொண்டு நீதி பரிபாலனம் செய்யத் துவங்குகின்றனர். இவர்களை பெரியநாட்டார் வகையில் கொள்வது சிறப்புடையதாகும். எனவே சித்ரமேழி பெரியநாட்டார் என்பது சாசன அடிப்படையில் ஏர்கலப்பை, பொன் பொருள் மற்றும் அறம் கூறும் செயல் திறம் படைத்தோர் என்ற முப்பரிமானத்தையும் பெற்றுத் திகழ்ந்தமையையும் நன்கு உணர்த்துகின்றன.

 

5. கல்வெட்டுக்களில் சித்ர மேழி நாட்டார் :   சித்ர மேழி நாட்டார்; அவர்தம் புகழை எடுத்துரைக்கும் வண்ணம் தெளிவாக உணர்துகின்றது திருக்கோயிலூர் பெருமாள் கோயில் கல்வெட்டு.

 

6. “ பூமாதேவிக்கு மக்களாகி நிகழச் செந்தமிழ் வடகலை தெரிந்துணர்ந்து, நிதிகெட்டு, நிபுணராகி, நறுமலர் வாடாத திருமகள் புதல்வர், எத்திசைக்கும் விளக்காக இன்சொல்லால் இனிது அளித்து, வன் சொல்லால் அறம் கடிந்து   அணைத்து தேவர்களும் தங்களது   அருளை   வழங்க எத்திசை   மகளிரும் இனிதே வீற்றிருக்க தெங்கும,; பலாவும், தேமாஞ் சோலையும, வாழையும,; கமுகும், வளர்கொடி முல்லையும், பூவையும், கிள்ளையும் கெழுமி வாட்டமின்றி கூட்டம் பெருகி… என்று தங்களது புகழைக் கூறி அடுத்து சித்ர மேழியே தெய்வமாகவும் செம்பொன் பசும்பையே வேலியாகவும் கொண்டவர் என்றும் உத்தமநிதி என்றும் உயர் பெருங்கீர்த்தி முத்தமிழ்மாலை முழுவதுமுணர்ந்த சித்ரமேழி பெரியநாட்டார் “ என பகருகின்றன. சோழர்கள் காலத்தில் இத்தகு பெரும் புகழைப் பெற்றுத் திகழ்ந்திருந்தனர். எனவே சித்ரமேழி நாட்டார் நிலத்தில் எத்தகைய ஈடுபாட்டுடன் பயிர்த்தொழிலை செய்துள்ளனர் என்பதையும் மேழியை தெய்வமாக போற்றியதையும் இவை தெளிவுபடுத்துகின்றன. குலோத்துங்கசோழனின் கல்வெட்டில் பெரியநாட்டார் கூடிய இடத்தை சித்ரமேழி மண்டபம் என குறித்துள்ளனர்.

 

7. தகடூர் நாட்டில் சித்ரமேழி நாட்டார் :     தகடூர் நாட்டிலும் சித்ரமேழி நாட்டார் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது   இங்குள்ள   வட்டாரக்   கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றன. சித்ரமேழி நாட்டார் குறித்து ஓசூர், ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள   கல்வெட்டுக்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

 

8. ஓசூர் நகரின் கிழக்கே அமைந்துள்ள ஓர் கற்பாறையில் காணப்படும் கல்வெட்டு பல சிறப்பான செய்திகளை எடுத்துரைக்கின்றன.   இக்கல்வெட்டில் ஒசூரை செவிடபாடி என்றும் இப்பகுதி சமண சமயத்திற்கு   முக்கியமான மையமாக திகழ்ந்துள்ளது என்பதையும் விஷ்ணுவர்த்தனாவின் சக ஆண்டு 1049 வது கல்வெட்டு (பொ.ஆ.1128)   விளக்குகின்றது.

 

9. முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்த இளந்தை (எ) சித்ரமேழி நல்லூர் எனும் கிராமம் செவிடபாடியில் அமைந்துள்ளது. இங்குள்ள   நன்செய்,புன்செய் நிலங்களை செவிடபாடியில் அமைந்த பாரீஸ்வ ஜீனாலயத்திற்கு தேவதானமாக வழங்கப்பட்டது. இதனை தளபதி தண்டநாயகன் கங்கிப்பையன் அவன்மகன் தண்டநாயகன் எச்சிமையன் மற்றும்   தண்டநாயகன் கேத்தாண்டியார் ஆகியோர் சமணக் கோயில் ஆராதனைக்கும் பராமறிப்பிற்கும் வழங்கப்பட்டதை உணரமுடீகின்றது. இக்கோயில் கங்கிப்பையன் என்பவரே கட்டியிருத்தல் வேண்டும். இவர் ஸ்ரீ புச்சந்திர சித்தாநந்தி தேவர் மகன் என குறிப்பிடப்படுகின்றது. எனவே சித்ரமேழி நல்லூரில் சமணர்கள் கோயிலுக்கு ஆராதiனா செய்தல் உணவு வழங்குதல் போன்றவை இருந்து வந்துள்ளதை தெளிவாக்குகின்றது. இக்கல்வெட்டின் மூலம் சித்ரமேழி நாட்டார் சமணத்துடனும் தொடர்பு கொண்டவர்கள் என்பது வெளிப்படுகின்றது. மேலும் இவர்கள் தங்கிய பகுதியையே சித்திரமேழிநல்லூர் என்ற பெயரிட்டு போற்றியதையும் இவை எடுத்துரைக்கின்றன.

 

சிற்பங்களில் சித்ரமேழி : ஏர்கலப்பையை சிற்பமாக வடிக்கும் பழக்கம் பண்டைய காலம் தொட்டே வழக்கில் இருந்துள்ளது. சங்ககால நடுகற்களிலும், சோழர்கள்கால நடுகற்களிலும் பிற பொருட்களுடன் கலந்து வருவதை காணலாம்.

 

10. சில வணிக கல்வெட்டுக்கள் பொறித்தவற்றில் ஏர்கலப்பையையும் கலந்து புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளதையும் காணமுடிகின்றது.

 

11.   திருக்கோயிலூர் பெருமாள் கோயிலில் சித்ரமேழியை தோரணம் தொங்கவிட்டு அலங்காரம் செய்த நிலையில் காணமுடிகின்றது. கல்வெட்டு செய்தியில் “ஜனனாத வளநாட்டுக்   குறுக்கைக் கூற்றத்து திருக்கோயிலூர் எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிச் சித்ரமேழி விண்ணகரான திருவிடைக்கழி நின்றருளின பெருமாள் கோயில்” என தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

 

12. அடுத்து ஊத்தங்கரை வட்டம் ஆம்பள்ளியில் காணப்படும் கோட்டுருவான ஏர்கலப்பைச் சிற்பம். இச்சிற்பம் மிகவும் சிறப்பானதும், நேர்த்தியாக வரையப்பட்டதும், தகடூர் நாட்டில் காணப்படும் முதன்மைச் சிற்பமும் ஆகும். ஆம்பள்ளியிலிருந்து ஜிஞ்சுப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் மூன்று பாறைக் குன்றுகள் காணப்படும். ஆந்த பாறைக் குன்றுகளில் ஒன்றில் சமணத் துறவியின் நின்ற நிலை உருவச் சிற்பமும், அடுத்து காணப்படும் பாறையில் ஏர்கலப்பை மட்டும் தனித்து அழகிய நிலையில் முழுமையாக நன்கு கோட்டுருவாக வரையப்பட்டுள்ளது. அடுத்து காணப்படும் பாறையில் விடுகாதழகியபெருமான் வெட்டிய கல்வெட்டுச் செய்தியையும் காணலாம். இவை இப்பகுதியில் சமணர்கள் தங்கி வாழ்ந்துள்ளதையும், சமணப்பள்ளிக்கு ஏரி, குளம் வெட்டி வழங்கியதையும் குறிப்பிடுகின்றது. எனவே வேளாண் தொழிலுக்கு நீராதாரத்தைப் பெருக்கி வேளாண் தொழில் வளர வழிவகுத்தனர் என்பதை இக்கல்வெட்டு தெளிவாக எடுத்தியம்புகின்றது.

 

13. எனவே இப்பகுதியிலும் வேளாண் தொழிலையும்,   ஏர் கலப்பையையும்   தெய்வமாக போற்றி வழிபட்ட சித்ரமேழி நாட்டார் இருந்துள்ளனர் என்பதும் அவர்கள் வணங்க சித்ரமேழி சிற்பத்தை செதுக்கி வைத்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது. இங்கு குறிப்பிடப்படவேண்டிய செய்தி என்னவெனில் சமணர்கள் இங்கு தங்கியபோது வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அவர்கள் சமணத்துறவிக்கு இணையாக ஏர்கலப்பையையும் வைத்து வணங்கியுள்ளனர் எனக் கொள்ளலாம். எனவே வேளாண் என்பது சமய அடிப்படையில் கருதப்படுவது அல்ல எனபதும் தெளிவகின்றது.

 

அன்றி இக்கருத்துக்கு உடன்படாவிடில் சமணர்களுக்கு இங்கு வாழ்ந்த சித்திர மேழி நாட்டார்கள் உறுதுணை புரிந்துள்ளனர் என்று கொள்ளலாம். இப்பகுதியில் வாழ்ந்த சித்திரமேழியார்கள் ஏற்கனவே சமணத்திற்கு உதவி புரிந்ததை நினைவில் கொள்ளலாம். மேலும் இச்சித்திரமேழி சிற்பங்களை வணிகக் கல்வெட்டுக்களிலும் பொறித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணப்படுவதைப் போலே விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம், காஞ்சிபுரத்திலும் சித்திரமேழி சிற்பபொறிப்புகளை காணமுடிகிறது எனில் அது தொடர்ந்து தொண்டை மண்டலத்திலும் செழிப்புற்றிருந்ததையே காட்டுகின்றது.

 

சித்ரமேழி நாட்டாரும் சமயமும் : சித்ரமேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொண்டவர்கள் இவர்களே பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகம், அறப்பணி, ஊர் நாட்டாமை, போர்த்தளபதி, தட்டான் என பல தொழில்களிலும் பங்கேற்றனர். அதுபோல சித்ரமேழி நாட்டார் சைவ, வைணவ, சமண சமயத்திலும் பல பகுதிகளில் தங்களை   இணைத்துக்கொண்டனர். சோழர்கள் காலத்தில் சபை, நகரம், வணிகம் போன்ற குழுக்கள் இருந்தன.   உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.

 

14. திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகத்தையும் தலையாகக் கொண்டு செயல்பட்டனர் என்பது ஏற்புடைத்து. எனவே சித்ரமேழி என்ற அடைமொழி கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்ட மக்களன்றி பிற தொழில்களை மேற்கொண்டவர்களையும்   சித்ரமேழி என்ற அடைமொழியிட்டே அழைத்துள்ளனர்.   குறிப்பாக சேலம்,   ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில்   சித்திரமேழி தட்டாநெந்,15.   சித்திரமேழி தட்டான் குழுமி16. என்றும் குறிப்பு காணப்படுவதை ஒப்பிடலாம். இவை காலப்போக்கில் சித்திரமேழி நாட்டார் பிற தொழிலிலும் ஈடுபட்டடதையே குறிக்கின்றது. அணைத்து சமயங்களிலும் சித்ரமேழி நாட்டார் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதையே சைவ, வைணவ, சமண கோயில்களில் காணப்படும் சித்திரமேழி குறித்த செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. சித்தரமேழி நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து பெரிய நாட்டார், சித்திரமேழி பெரிய நாட்டார் போன்ற பெயர் அமைப்புகள் சமய வேறுபாட்டை குறிக்கின்றனவா அன்றி அணைத்து சமயத்திலும் சித்திரமேழி பெரிய நாட்டார் பிரிவு கலந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். முறையாக   உழவுத் தொழிலில் ஈடுபட்டோரை நாடு என்று குறித்தனர். பின்னர் நாட்டை நிர்வகிக்கும்   பொழுது நாட்டார்   என பெயர் பெற்றனர்.   இவர்களே சித்ரமேழிநாட்டர்   என்றும்     சித்ரமேழி   பெரிய நாட்டார்       என்றும்   அழைக்கப்பட்டனர்.     உழவுத்தொழிலைத்   தொடர்ந்து     வணிகம்   வந்தது   இவ்வணிகக்   குழுக்களைக்   குறிப்பிடும்   பொழுது   நானாதேசிகர், திசையாயிரத்து ஐநூற்றுவர் என்றும், உழவுத்தொழில் பிரிவு வணிகர்களை குறிக்கும் பொழுது சித்ரமேழி பெரிய நாட்டார் எனவும் அழைத்தனர்.   ஊர், நாடு, பெரிய நாடு, பேரிளமை நாடு என்பதும் பெரிய பகுதிகளாகும் இப்பகுதிகளை நிhவகிப்பவர்கள் தங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. எனவே தங்களது சமுதாயத்திற்கு முழுவதும் பொறுப்பானவர்களையே அமைத்து வந்துள்ளனர். அத்தகைய பெருமக்களை சித்திரமேழி பெரியநாட்டார் அல்லது பெரியநாடாள்வார் என்றும் அழைத்துள்ளனர்.17. எனவே வேளாண் தொழில்புரிந்து நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை புரிந்த மக்களே சித்ரமேழி பெரிய நாட்டார் என்றழைக்கப்பட்டவர்கள் என்பது பொருந்தும். அவர்கள்     தமிழகத்திலும் குறிப்பாக தகடூரிலும்   பொ.ஆ. 10 ஆம்   நூற்றாண்டில் செழிப்புடன் இருந்தமையையே   இவை உணர்த்துகின்றன.

 

அடிக்குறிப்புக்கள் :

 1. புறநானூறு .     பாடல் எண் 35.
 2. நாகசாமி. இரா.   யாவரும் கேளிர்,வாசகர்வட்டம்,சென்னை. 1973.
 3. மேலது.
 4. மேலது.
 5. பிள்ளை.கே.கே.   தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்,தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்,சென்னை 1975.
 6. தெ.இ.க.சா. எii       எண்.129.
 7. நாகசாமி.இரா.           யாவரும் கேளிர், வாசகர்வட்டம் சென்னை.1973
 8. செல்வராஜ்.ச.     தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும் (அச்சில் )
 9. செல்வராஜ்.ச.     சந்திரசூடேசுவரர் திருக்கோயில் கட்டுரை.
 10. செல்வராஜ்.ச.     மல்லச்சந்திரம் நடுகல். கல்வெட்டு காலாண்டு இதழ் தொ.து.
 11. ராசகோபால்.சு.   பொலிச்சலூர் வணிகக் கல்வெட்டு.
 12. தெ.இ.க.சா.     எண்.128
 13. த.மா.க.தொ.1.       எண். 145
 14. நாகசாமி.ரா.     யாவரும் கேளிர்,வாசகர்வட்டம்,சென்னை.1973.
 15. கிருஷ்னன்.       சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கல்வெட்டு :எண் 97.
 16. சீதாராம் குருமூர்த்தி.இ.ஆ.ப. ஈரோடு மாவட்ட கல்வெட்டு தொ.1.எண் 114.
 17. தி.ஸ்ரீ.ஸ்ரீதர்.இ.ஆ.ப.   Select Inscription of TamilNadu,Department of Archaeology Government of Tamilnadu,Chennai.2006

நன்றி:   திட்டக்குடி பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டில் எழுபத்தொன்பது நாட்டு           விண்ணகர் எம்பெருமான்கோயில் என்றும்,   திருக்கோயிலூர் பெருமாள் கோயிலில் காணப்படும் எழுபத்தொன்பது நாட்டு பதினெண்பூமி       சித்திரமேழி விண்ணகர் என்ற குறிப்பு தொடர்பாக திரு. .பார்த்திபன்.வரலாற்று ஆய்வாளர்,தருமபுரி அவர்களுடன் கலந்துரையாடிய போது வைணவத்தலங்களில் சித்ரமேழி நாட்டாரை இவ்வாறு அழைத்திருக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>