‘தகடூர்’ என்ற பெயர்ச்சொல் ஒரு நாட்டின் பெயரையும் ஒரு ஊரின் பெயரையும் சுட்டும் ஒன்று. வரலாற்றுக்காலத்தின் தொடக்கம் முதல் அறியப்படும் இப்பெயர் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக 2000 ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்த பெயராகும்.

தகடூர் பெயரை தகடு+ஊர் என பிரித்துப் பொருள்கொள்ளலாம். ‘தகடு’ என்பதற்கு ‘மென்மையும் தட்டையுமான வடிவு’ என்பது பொருள். சங்க இலக்கியத்தில் தகடு என்னும் சொல் 1.‘தகட்டு வடிவப்பொருள்’ 2.‘பொன்’, 3.‘பூவின் புற இதழ்’ ஆகிய முப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (இளங்குமரனார்:2009:பக்.1-2). அவற்றுள்ளும் “கருந்தகட் டுளைப்பூ மருது” (முருகு: வ-27), “தூத்தகட் டெதிர்மலர்” (நற்:52), “வேங்கை மாத்தகட் டொள்வீ (புறம்:202), “கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ (ஐங்குறு:219), “கானப் பாதிரிக் கருந்தட்டு” (அகம்:261) எனப் பூவின் புறவிதழ் என்ற பொருளில் பெருவழக்குப் பெற்றுள்ளது.

‘தகடு’ என்பது பொதுவாக பூவின் புற இதழை குறிப்பாக தாமரை இதழை குறிக்கும் சொல் என்பதும் மேற்கண்ட பொருளைச் சார்ந்ததே. தகடூர் ‘தகடை’ தகட்டூர், ‘தகட்டா’, ‘தகடா’, ‘தகடு’ என்றும் அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. பிற்காலக் கல்வெட்டு ஒன்று ‘தடங்கமலத் தகடை’ என்று இவ்வூரை குறிப்பிடுவது, இவ்வூர் தாமரை மலரின் வடிவில் அமைந்த காரணத்தலே என்பர் (இராசு.(மே.கோ)-நா.மார்க்சியகாந்தி,1998,ப.56). ஆனால் நகரமைப்பு போன்ற முன்னேற்றங்கள் தோன்றாத காலத்திற்கு முற்பட்டே வழக்கத்தில் இருக்கும் இப்பெயருக்கு இயற்கையமைதியில் பொருள் கொள்வதே சரியாக இருக்கும் (நா.மார்க்சியகாந்தி, மேலது).

தகடூரின் நடுப்பகுதி சமவெளிப்பகுதியாகவும் சுற்றிலும் மலைகளாகவும் அமைந்துள்ளது. எனவே மலைகளுக்கு நடுவே அமைந்த தட்டையான மென்மையான சமவெளிப்பகுதியில் அமைந்த ஊர் என்பதால் ‘தகடூர்’ என்று பெயர்ப்பெற்றது. இந்த வகையில் நிலவியல் அடிப்படையில் இப்பெயர் ஒரு காரணப்பெயராகும்.

இக்காரணப்பெயர் தவிர மறுபரிசீலனை செய்ய வேண்டிய பல கருத்துக்கள் பல அறிஞர்களால் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

 1. “அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலையுடைய ஊரென்னும் பொருள்பட அதியமான் தன்னூர்க்குத் தகடூர் எனப்பெயர் வைத்தான்”. (புலவர்.பாண்டியனார். ‘எழினி’.(மே.கோ)- இளங்குமரனார், 2009:பக்.1-2)
 2. “தகடு என்பது உயரமின்றித் தகடாக அமைந்த மலையைக் குறிக்கும். ஆகையால் அம்மலை சார்ந்த ஊர் தகடூர் எனப் பெயர் பெற்றது. இவ்வாறு பொருள் கொள்வதும் இயற்கை தழுவியதாம்”. (இளங்குமரனார், 2009:ப.2)
 3. “தகரமரம் என்ற ஒரு வகை மரம் இப்பகுதியில் நிறைந்திருந்தால் இந்த மரத்தின் அடிப்படையில் தகடூர் என்ற பெயர் வந்தது என்று மற்றொரு கருத்து உள்ளது. மரம், செடி, கொடி போன்றவற்றின் பெயரில் நாட்டின் பெயர் வருவது இயற்கை” (தி.சுப்பிரமணியன்,2010:ப.4)

தகடூர் – அறியப்பட்ட முதல் சொல்லாட்சியும் காலகட்டமும்

வரலாற்றுத் தொடக்ககாலம் முதல் தகடூர் என்ற ஊர்ப்பெயர் வழக்கில் இருந்துள்ளது என்பது மேலே குறிப்பிடப்பட்டது. இப்பெயரை முதலில் எங்கு யார் பயன்படுத்தியது என்ற கேள்விக்கு விடை காணவேண்டியது அவசியமாக உள்ளது.

வரலாற்றுக்கால வரையறை ஒரு பார்வை

தமிழகத்தின் வரலாற்றுக் காலம் சங்க இலக்கிக்கிய காலத்துடன் தொடங்குகிறது என்ற வறையரை பொதுவில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்ட ஒன்று. எந்த ஒரு நாட்டின் அல்லது எந்த ஒரு பகுதியின் வரலாறும் எழுத்துப்பூர்வமான ஆதாரம் கிடைக்கும் காலகட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. இதன் காரணமாக வடஇந்தியாவின் வரலாற்றுக் காலம் மு.பொ.ஆ. 1500 (மு.பொ.ஆ = முன் பொது ஆண்டு வறையரை, BCE1500. பழைய வறையரையில்: கி.மு.1500)-இல் தொடங்குகிறது.*அ.கு-1 அதே சமயதில் தென்னிந்தியாவின் குறிப்பாக பண்டைய தமிழகத்தின் வரலாற்றுக் காலம் மு.பொ.ஆ. 400 (BCE400. பழைய வரையறையில்: கி.மு.400)-இல் தொடங்குகிறது. சிந்துவெளி எழுத்துக்கள் அனைவராலும் ஏற்கத்தக்க அளவில் படிக்கப்பட்டால் இந்தியாவின் வரலாற்றுக்காலம் மு.பொ.ஆ. 2500-இல் இருந்து தொடங்கும். சிந்துப்பகுதியில் அவ்வப்போது பல்வேறு நாட்டு தொல்லியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகள் சிந்துவெளி நாகரிகத்தின் காலக்கணிப்பைத் தொடர்ந்து முன்நோக்கிக் நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. இந்நகர்த்தலைக் கணக்கில் கொண்டால் இக்கால வறையரையை உலகின் மிகத்தொன்மையான சுமேரியப்பண்பாடுக் காலகட்டமான மு.பொ.ஆ. 3100 அளவினதாகவோ அதற்கும் முற்பட்டதாகவோ இருக்கக்கூடும் என கவனிக்கத்தகுந்த அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிந்துவெளி எழுத்துக்கள் கொண்டு இந்தியாவின் வரலாற்றுக் காலம் எவ்வளவு முன்கொண்டு செல்லப்படுமோ அவ்வளவினதாக தமிழகத்தின் வரலாற்றுக்காலத்தை முன்கொண்டுச் செல்லமுடியும். அதற்கான தொல்லியல் சான்று குறிப்பாக பாறை/குகை ஓவியங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இச்சான்றைப் பொருத்த அளவில் தகடூர்ப்பகுதியின் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும்பங்கை வழங்குகிறது. *அ.கு-2

மேலே விவரித்தவை தற்போது ஒரு தர்க்கத்திற்கும், விரிவான பருந்துப் பார்வைக்கும் மட்டுமே பயன்தருவது. காலத்தை முன்கொண்டுச் செல்லும் அகழாய்வு முடிவுகளும், தொல்பொருட்ச் சான்றுகளும் மட்டுமே மேலே அனுமானமாக முன்வைக்கப்பட்டக் கருத்துக்களை மெய்யாக்கும்.

சங்க காலத்தின் கால வரையறையில் அறிஞர்கள் தொடர்ந்து மாறுபட்டக் கருத்துக்களுடனே உள்ளனர். கி.மு.5000-ல் தொடங்கியது எனக் கட்டற்றுச் செய்யப்பட்டக் காலவரையறைகளை மறுத்து அறிவியல்பூர்வமாக காலவறையரை முதலில் வெளிப்படுத்திய கே.என்.சிவராசப்பிள்ளை முதற்கொண்டு ச.வையாபுரிப்பிள்ளை, கமில்சுவபில், வ.அய்.சுப்பிரமணியம், மயிலை.சீனி. வேங்கடசாமி, இரா.நாகசாமி, நடன.காசிநாதன், ஏ.சுப்பராயலு, கா.இராஜன், வி.பி.புருசோத்தமன், பத்மஜாரமேஷ், பொ.மாதையன், ஆகியோர் இலக்கிய அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தொல்பொருட் சான்றுகள், வெளிநாட்டார் குறிப்புகள், அயல் இலக்கியங்கள், காசியல், தொல்லெழுத்துக்கலை, சடங்குகளின் அடிப்படைத் தரவுகள் என பல முறைகளைக் கொண்டு தற்காலம் வரை பலரும் இக்காலகட்டத்தை வறையறுக்க முயன்று வருகின்றனர்.

இந்த ஆய்வுகளில் இருந்து உடனடியாகத் துல்லியமான காலகட்டத்தை அடையமுடியாவிட்டாலும் சங்க காலத்தின் தொடக்க ஆண்டுகளை மு.பொ.ஆ.400 பிற்பட்டுத் தள்ள முடியாத தொன்மையை அடைந்துள்ளோம். பொ.ஆ.250-300 இல் சங்ககாலம் முடிவுற்றது என்ற வறையரை தற்போது எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

தகடூர் – இலக்கியச் சான்று

சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான ‘பதிற்றுப்பத்து’ தொகுப்பில் எட்டாம் பத்தின் ஆசிரியர் அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறை குறித்துப்பாடிய எட்டாம் பாடலில், (பா: 78, வ 8-9)

“வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்

வில்பயில் இறும்பின் தகடூர் நூறி

-என்ற விவரிப்பில் தன் தகடூர் பெயர் முதன் முதலில் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக, எட்டாம்பத்தின் பதிகப்பாடலில் ‘தகடூர்’ பெயர் குறிப்பிடப்படுகிறது. (பதி.பற்.பதி:வரி:9). இப்பதிகப்பாடலைப் பாடியவர் யார் என்ற விவரம் அறியக்கூடவில்லை. எட்டாம் பத்தின் முன்வைப்பாக இப்பதிகப்பாடல் இடம் பெற்றுள்ளது. இதில்,

‘- – - -       அடுகளம் வேட்டுத்

துகள்நீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்

தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய

- – - – ’

இப்பாட்டின் வார்த்தைகளைத் தொடர்ந்தே சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை “தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அடையுடன் வரலாற்று ஆசிரியர்களால் சிறப்பித்து அழைக்கப்படுகிறான்.

அதியமானுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்த செய்திகளை விவரிக்கும் நூல் ‘தகடூர் யாத்திரை’. இந்நூலுக்கு ‘தகடூர் மாலை’ என்ற பெயரும் உண்டு. (மயிலை சீனி. வேங்கடசாமி,2003), தகடூரின் பெயரை மூன்றாம் முறையாக இந்நூலின் தலைப்பில்தான் அறிய வருகிறோம்.

சங்க இலக்கியத்தில் இந்த மூன்று சான்றைத் தவிர வேறு சான்றுகள் இல்லை. தகடூர்யாத்திரை சங்க நூல்களில் ஒன்று என்ற கணக்கின் அடிப்படையிலானது இந்த எண்ணிக்கை. மேலும், அரிசில்கிழார் பாடிய புறநானூறு 123 வது பாடலின் கொளு ‘அதியமான் தகடூர் பொருது வீழ்ந்தான் எழினி’ என குறிப்பிடுகிறது. கொளு சூத்திரங்கள் இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. கொளு சான்றை கொளு எழுதப்பட்டக் கால கட்டத்தில் ‘தகடூர்’ பெயர் வழக்கில் இருந்ததை சுட்டி நிற்கிறது எனக்கொள்ளலாம். .

பக்திஇலக்கியக் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பொ.ஆ.9ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் வைப்புத்தலமாக வைத்துப்பாடிய பாடல் ஒன்று தகடூர் பெயரை குறிப்பிடுகிறது. (சுந்தரமூர்த்தி, தேவாரம்-பொது, திருநாட்டுத்தொகை). இது சங்ககால சோழ மன்னன் கோச்செங்கண்ணன் எழுப்பிய ‘கோச்சேங்கண்ணீஸ்வரர் கோயில் குறித்துப் பாடியது எனக் கருதப்படுகிறது.

“வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்

கூழை ஏறுகந்தான் இடங்கொண்டதும் கோவலூர்

தாழையூர் தகடூர் தக்களூர் தருமபுரம்

வாழைக்காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே”.

(இப்பாடலில் குறிப்பிடப்படும் தகடூர் வேறு தகடூர் என்று அறிஞர்களிடையே கருத்துமுரண் உண்டு, தகடூர்- தகட்டூர் என்ற பாடபேதமும் இப்பாடலுக்கு உண்டு). இச்சான்றுகளைத் தவிர தகடூர் பெயரைக் குறிப்பிடும் வேறு சான்றுகளைக் இலக்கியங்கள் வழி காணமுடியவில்லை.

இவ்விலக்கிய ஆதாரங்களைத் தவிர சான்றுகளற்று மறுபரிசீலனை செய்ய வேண்டிய பல கருத்துக்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. ஆதாரமற்ற அவற்றை புறக்கணிக்கவாவது அவற்றை அறிந்துகொள்வது அவசியம். இது தகடூர் வரலற்றின் மீது கட்டப்பட்டப் பிரச்சனைகளைக்களைய உதவும்.

 1. தகடூர் என்ற பெயர் அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பயின்று வருகின்றது.
 2. அதியமான் நெடுமான் அஞ்சியைச் சிறப்பித்துப்பாடிய அவ்வையார் தம்பாடல்களில் தகடூரைச் சிறப்பித்துப்பாடியுள்ளார்.
 3. ‘தடங்கமலத்தகடை’ என்ற பெயரை தகடூர்யாத்திரை நூல் ‘தாமரைப்பூவின் புறவிதழைப்போன்ற ஊர்’ என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.

தகடூர் – கல்வெட்டுச் சான்று

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பாப்பம்பாடி (இருளப்பட்டி) என்ற ஊரில் உள்ள பொ.ஆ.5 ஆம் நூற்றாண்டு நடுகல்கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/61) ‘தகடூர்’ பெயரைக் கொண்டிருக்கிறது, இதுவரை அறியப்பட்ட கல்வெட்டுகளில் தகடூர் பெயரைத் தரும் பழைமை வாய்ந்த கல்வெட்டு இதுவே. மேலும், பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/16), பொ.ஆ.8-9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/127), பொ.ஆ.10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/140) பொ.ஆ. 1010 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/78), பொ.ஆ. 1036 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/85), பொ.ஆ. 1045 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/29), பொ.ஆ. 1017 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-B), பொ.ஆ. 1041 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-A), பொ.ஆ.11 ஆம் நூற்றண்டு கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/38), பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/149), பொ.ஆ. 1073 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/84), பொ.ஆ. 1051 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-A), பொ.ஆ. 1227 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/93) பொ.ஆ.1249 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/86), பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/111), (த.தொ.ஆ.து.எண்:1974/106), (த.தொ.ஆ.து.எண்:1974/107), (த.தொ.ஆ.து.எண்:1974/149) மற்றும் (த.தொ.ஆ.து.எண்:1973/120) கல்வெட்டுக்கள், பொ.ஆ. 1369 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/77-A) போன்றவை ’தகடூர்’ பெயரை வழங்குகின்றன.

பொ.ஆ. 1191 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/150) ’தகடு’ பெயரை வழங்குகின்றது.

பொ.ஆ. 1244 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/92), பொ.ஆ. 1296 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/137) பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/54), (த.தொ.ஆ.து.எண்:1974/87), பொ.ஆ. 1421 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/169) போன்ற கல்வெட்டுக்கள் ‘தகடை’ என்ற பெயரை வழங்குகின்றன.

பொ.ஆ.13-14 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/28) ‘தகடா’ (தராயன்) பெயரை வழங்குகின்றது.

பொ.ஆ. 1198 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/174), பொ.ஆ.14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் (த.தொ.ஆ.து.எண்:1974/129), (த.தொ.ஆ.து.எண்:1973/39) பொ.ஆ. 1441 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/121), பொ.ஆ. 1430 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/122), பொ.ஆ. 1415 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/121) போன்ற கல்வெட்டுக்கள் ‘தகட’ என்றும் குறிப்பிடுகின்றன.

கன்னடமொழி கல்வெட்டுகளில் ‘தகடூரு’ எனக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. பொ.ஆ. 892 (SII.VII.No: 530), பொ.ஆ. 929, (SII.IX p.I No: 23) கல்வெட்டுக்கள் தகடூரு என குறிக்கின்றன. தகடூரு என்ற வழக்கு தகடூர் என்பதன் நேர் கன்னட வழக்காகும்.

இக்கல்வெட்டுச் சான்றுகள் தகடூர் என்ற பெயரானது சங்க காலம் முதல் 12 ஆம் நூற்றாண்டு சோழர்கள் ஆட்சி வரை பல்லவர் ஆட்சிக்காலம் உட்பட எவ்வித மாற்றமும் இன்றி வழக்கில் இருந்ததை உறுதி செய்கின்றன. 9-10 ஆம் நூற்றண்டின் கன்னட கல்வெட்டுக்களும் கன்னட வழக்கைக் கொண்டிருக்கின்றனவே தவிர மருவடையவில்லை என்பதை உணர்த்துகின்றன. 12ஆம் நூற்றண்டின் இறுதியிலும், 13 ஆம் நூற்றண்டில் ஹொய்சாலர் ஆட்சிக்காலத்தில் தான் தகடு, தகட என மருவியப் பயன்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

14-15 ஆம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சிக் காலத்தில் தகடை என்ற பயன்பாட்டை அறியமுடிகிறது.

தகடூர் – ஊரின் பெயராகவும் நாட்டின் பெயராகவும் விளங்குவது எப்படி

‘தகடூர்’ என்ற பெயர் வழக்கின் துவக்கத்திற்கு நிலவியலே அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. தகடூர் ஒரு ஊரின் பெயராகவும் நாட்டின் பெயராகவும் விளங்கியது எப்படி என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாக உள்ளது.

தகடூர் நிலவியல் அடிப்படையான காரணப்பெயர் என்பது தகடூர் நகரத்திற்குப் பொருந்துவதாக உள்ளது. ஆனால் இந்த நிலவியல் அடிப்படை தகடூர் நாட்டிற்குப் பொருந்துவதாக இருக்க முடியுமா? தகடூர் நாட்டின் நிலவியல் அடிப்படைகள் இதற்குப் பொருந்துவதில்லை.

இந்த நிலையில் நிலவியல் அடிப்படையில் நாட்டின் பெயர் அமைந்துள்ளதா? முன்னுதாரணம் உண்டா? என்றால், தகடூர்ப்பகுதியிலேயே விடையுள்ளது. ‘புறமலைநாடு’. புறத்தே மலை சூழ்ந்த நாடு என்ற பொருளில் புறமலைநாடு பெயர் உள்ளது. இப்பெயரை 8ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றண்டுக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.

ஒரு ஊர்ப்பெயரை அடியாக்கொண்டு அல்லது தலைநகரின் பெயரைக் கொண்டு நாட்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளதா, உருவாக்கப்பட்டுள்ளதா? உள்ளது. பிற்காலத்தில் ‘விஜயநகரம்’. சங்க காலத்தில் சில உதாரணங்களைக் காணமுடிகிறது. கூற்றம் என்ற சொல் நாடு என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஊரின் அடிப்படையில் கூற்றம் அழைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டவை மிகச் சிறியபரப்பளவைக் கொண்டவை. தகடூர் நாட்டுக்கு இது பொருந்துமா என ஆலோசிக்கவேண்டியுள்ளது. பிற்கால உதாரணமான விஜயநகரம் இதற்கு விடை தருகிறது. விஜயநகரம் என்ற நகரை உருவாக்கி அல்லது ஒரு நகரை கைப்பற்றி அதற்கு விஜயநகரம் எனப்பெயரிட்டு அண்டை, அயல் பகுதிகளை வென்று மிகப்பெரிய நாடாக ஆன வரலாறு தகடூர் நாட்டுக்கு மிகச்சரியாகப்பொருந்தும் எனலாம்.

ஆனால் சங்க கால அரசுகள் உருவாக்கம் அரசகுடிப்பெயர்கள் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, ஓய்மாநாடு, தொண்டை நாடு,… இந்த வகையில் அதியர்நாடு என வழங்கப்படாமைக்கு வேறு காரணமும் இருந்திருக்கக்கூடும் என்பதை வலியுறுத்துகிறது.

சங்க இலக்கியத்தில் ‘தகடு’ சொல்லாட்சி முப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை முன்பு எடுத்துக்காட்டப்பட்டது. ‘பூவின் புற இதழ்’ என்ற பொருளொடு ஆலோசித்த காரணங்கள் விவரித்து அதன் காரணப்பொருள் மேலே விவரிக்கப்பட்டது. ‘தகடு’ சொல்லாட்சியின் பிற இரு பொருள்களான ‘தகட்டு வடிவப்பொருள்’ ‘பொன்’ ஆகியன குறித்து ஆய்வதும் தகடூர் ஊர்ப்பெயராய்வுக்கு அவசியமாக உள்ளது. அது புதிய பொருளை வழங்குகிறது.

தகடு என்பது உலோகப் பொருளைத் தரும் ஒரு சொல்லாகும். தட்டுபோல வார்த்து எடுக்கப்பட்ட எல்லா உலோகப்பொருளையும் தகடு சொல் சுட்டுகிறது. மாந்தரினத்தின் உலோகப் பயன்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்ட உலோகப்பண்பாட்டின் நிரல்படி, தென்னிந்தியப் பண்டைய வரலாறு செம்பு, வெண்கலப் பண்பாடுகளைக் கடந்து வராமல் நேரடியாக இரும்பு உலோகப்பண்பாட்டிற்கு வந்தது என்பர். (புருஸ்புட்:) இங்கு கிடைக்கும் செம்பு, வெண்கலப் பொருட்கள் அவ்வவ் உலோகப்பண்பாடுகளை அடையாளப்படுத்தாமல், இரும்புக்காலத்தின் உடன் வெளிப்பாடாக உள்ளதும் மனங்கொள்ளத்தக்கது.

எனில், இங்கு தகடு இரும்பு வார்ப்பையே சுட்டுகிறது. தகடூர் நாட்டின் இரும்பு வளம்/கனிம வளம் குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது. (த.பார்த்திபன், 2009, பக்:191-194). இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட, குட்டூர் அகழாய்வும் தகடூர் நாட்டில் இரும்பு நாகரிகத்தின் தொன்மையை வெளிச்சமாக்குகிறது. கஞ்சமலை இரும்பும், எஃக்கின் தரமும் உலகப்புகழ் வாய்ந்தது. பெரிய இலட்சியத்துடன் இந்தியா மீது பொ.ஆ.326-இல் படையெடுத்த மாவீரன் அலெக்சாந்தருக்கு, சிந்துப்பகுதியில் புருசோத்தமனால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களில் குறிப்பிடத்தகுந்தது 38 பவுண்ட் எடையுள்ள எஃகு. இந்த எஃகு தகடூர் நாட்டின் கஞ்சமலையின் உற்பத்தி. மு.பொ.ஆ 4-ஆம் நூற்றண்டைச் சேர்ந்தவன் அலெக்சாந்தர். இதேகால கட்டத்தில் தகடூர் கஞ்சமலை எஃகு, கிரீஸ், ரோம்-இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நிகழ்வுகளின் காலகட்டத்தில் தகடூரை ஆட்சிப்புரிந்தவர்கள் அதியர் மரபினர். இது இரும்புத் தொழில் நுட்பத்தில் அதியர் மரபினரும் தகடூர் நாடும் பெற்றிருந்த சிறப்பை அடையாளமாக்குவது.

வே.சா. அருள்ராசு (2000: பக்:9-10) காட்டும், “கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்ரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இரும்பு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என கே.என்.பி. ராவ் கூறுகிறார்”; “பி.கே.குருராஜ ராவ் கி.மு.450 ஆம் ஆண்டில் க்டெசியஸ் (Ktesias) தனது குறிப்பில் பெர்சியன் அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் பரிசளிக்கப்பட்டதாகவும், தென்னிந்தியர்கள் கி,மு.500 ஆம் நூற்றாண்டிலே உருக்கு செய்யும் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்”; “வார்மிங்டன் தனது நூலில் இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன, அவை   மேலும் சில ஆதாரங்கள் கி.மு.450 ஆம் ஆண்டில் க்டெசியஸ் காலத்தில் மிகவும் பெரும் புகழுடன் விளங்கின; இந்தக் கட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது என்றும் கூறிச்செல்கிறார்”.

சர்.ஜே.ஜ. வில்கின்சன் போன்ற அறிஞர்கள், “இரும்பிலிருந்து எஃகு செய்யும் முறை தமிழ்நாட்டார்க்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” (சோமலே, (மே.கோ), 1961,ப.30) சேலம் மாவட்டம்) என்று தெரிவிக்கும் கருத்தும், உலகப்புகழ் மிக்க உலோகத்தொழில் கலையியல் வல்லுநர் பேராசிரியர் எம்.கொலாந்து அவர்கள் “ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதர்க்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில் செய்யப்பட்டு வந்ததாக” தெரிவிக்கும் கருத்தும், இவர் இரும்பின் உற்பத்தி தெரிவிக்கும் கருத்தான “அங்கு (தென்னிந்தியாவில்) இரும்பை உருக்கிக் காய்ச்சுவதைத் தற்செயலாகவே ஆதிகாலத்திய மக்கள் கண்டறிந்திருக்க வேண்டும்; கற்கருவிக்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும் மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தார், இரும்பினைக் கண்டறிந்த, பிறகே ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழ்விடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதுவதே பொருத்தமாகத் தொன்றுகிறது. இரும்புக் கருவிக் கால நாகரிகமே குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது; மிகப் பழைய காலம் முதல் இரும்பைப் பயன்படுத்திவருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. மேலும் துருப்பிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்பு மிக்கதோர் முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர் (வரலாற்றுக்குழு,1975,ப.126)*அ,கு:2 என்ற கருத்தும் உலகில் இரும்புத் தொழில்- இரும்பு நாகரிகத்தின் துவக்கத்தை மிகச்சரியாக அடையாளப்படுத்துவன.

அதுபோலவே “இன்றைக்கு 4000 வருடங்களுக்கு (மு.பொ.ஆ.2000) முற்பட்ட எகிப்த் நாட்டில் உள்ள ‘பிரமிட்’ கட்டடங்கள் கட்ட பயன்பட்ட உளி, சுத்தியல் போன்ற கருவிகள் சேலம் கஞ்சமலை இரும்பால் செய்யப்பெற்றவை” என்ற எஃகு நிபுணர் சே.எம். கீத் மற்றும் சர். ஜே.ஜ. வில்கின்சன் அவர்களின் கூற்றும் தகடூர் நாட்டில் இரும்பு நாகரிகத்தின் பழைமையை அடையாளப்படுத்தும் ஒன்று. மற்றொரு அறிஞர் ஹெட்ஃபில்ட் குறிப்பிடும் பொது “எகிப்தியர்கள் எஃகில் கருவிகள் செய்வதற்குரிய அறிவையும், கடின இரும்பைத் தயாரிப்பதற்கான அறிவையும் இந்தியர்களிடமிருந்து கற்றார்கள்” என்பார். (வே.சா. அருள்ராசு, 2000:ப.10) இவையே இந்திய-தமிழகத்தின் இரும்பு நாகரிகத்தின் தொன்மையையும் வெளிப்படுத்துவது ஆகும். உலகின் பிற நாடுகளில் எஃகு இன்னதென்பது குறித்து அறியாத காலத்தில் தகடூர் நாட்டின் பகுதியாகிய சேலம் கஞ்சமலைப் பகுதியில் தயாரிக்கப்பட்ட எஃகு உலகில் அன்று அறியப்பட்ட மிகச் சிறந்த மேற்கு, மற்றும் சின்ன ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பது கொண்டு பழந் தமிழரின் –தகடூர் நட்டின் -தொழில் நுட்பத் திறனின் பெருமையும் செழிப்பும் நன்கு வெளிப்படுகிறது.

சங்க காலத்தின் மத்திய கால கட்டத்தைச் சார்ந்த பெரிப்புளுஸ் மற்றும் பிளினி போன்றவர்களும் தகடூர்ப் பகுதியில் (சேலத்தில்) இருந்து எஃகு என்னும் இரும்புப் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளர் என்பது, தொன்மையான காலத்திலிருந்து தொடர்ந்த ஏற்றுமதி வாணிபத்தின் இடையறாத செயலின்தொடர்ச்சியின் பதிவுகளே எனலாம். பெரிப்புளுஸ்-ன் ஆசிரியார் முதலாம் முன்பொது நூற்றாண்டைச் (1st Cen.BCE)சேர்ந்தவர். இவர், இரும்புத் தாதுக்கள் இந்தியாவின் எல்லா இடங்களிலும் கிடைப்பதாகவும், நல்ல தரமான எஃகு இரும்பு சேரர்களால் தயாரிக்கப்பட்டு ஆட்டுத்தோல் மற்றும் இறைச்சியுடன் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். இக்கருத்தை இரண்டு விதமாக அணுகவேண்டியுள்ளது. 1. சேர நாட்டுப்பகுதியில் கிடைத்த தரமான எஃக்கை சேரர்கள் ஏற்றுமதி செய்தார்கள் என்பது. 2. சேரர்கள் தகடூரை வென்ற பிறகு, கஞ்சமலைப்பகுதியிலிருந்து தரமான எஃக்கை ஏற்றுமதி செய்தார்கள் என்பது.

தகடூர் நாட்டில் இருந்து பெற்ற எஃகினால் உலகப் புகழ்பெற்ற டமாஸ்கஸ் வாள் (Damascus Sword) ஐரேப்பாவில் செய்யப்பட்டது என்பதும் (F.J.Richarts, Part-II,p.27), “அரேபியாவில் இருந்த பழைய இரும்புத் தொழிற்சாலை ஒன்றுக்கு, இந்தியாவிலிருந்தும், பெர்சியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டு இரும்புத் தொழில் நடந்தேரியதாகவும், மேலும் சிரியா நாட்டில் குறிப்பாக டமாஸ்கஸ் என்னும் முக்கிய நகரத்திலும் அதன் மேற்கிலும் அராபியர்கள் சிசிலி மற்றும் ஆப்பிக்காவில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் வேலை பார்தபோது இரும்பினை மேலும் சீர் செய்யும் நேக்கில் இந்தியாவுக்கு அனுப்பினார்கள்” என்ற (R.J. Forbes, Matallurgy in Antiquity, (1950), (மே.கோ)அருள்ராசு). கருத்தும் குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் செய்திகளகும்.

இவ்வாறு இலக்கிய, வெளிநட்டார் குறிப்புகள் மற்றும் தொல்பொருள் ஆதாரமாக உள்ளவை இந்திய இரும்பு நாகரிகத்தின் வரலாற்றை மறுபரிசீலனையை செய்து திருத்தி எழுதவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.

இதே காரணத்தினால் தகடு என்ற ‘கரும்பொன்’ என்று அறியப்பட்ட இரும்பு வளம், இரும்பு தொழில் – இரும்பு வணிகத்தின் காரணமாக தகடூர் பெயர் நாட்டின் பெயராக அமைந்திருக்கலாம் எனலாம்.

அடிக்குறிப்புகள்:

*1: இந்த வரையறை ‘ரிக் வேதம்’ வாய்மொழியாக உருவான தொடக்காலத்தில் இருந்து, அதாவது ஆரியர் சிந்துப்பகுதியில் நுழைந்த மு.பொ.ஆ. 1500 காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் வேதங்கள் பொ.ஆ. 14-15 ஆம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவாக்கம் பெற்றன. இங்கு 2000 ஆண்டு வாய்மொழி மரபு எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வு, விமர்சனம் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தென்னிந்தியாவின் முதல் எழுத்துப்பூர்வ ஆவணமான ‘தொல்காப்பியம்’ தன் காலத்திற்கு முன் வழக்கில் இருந்த மொழி, பண்பாட்டு மரபுகளை தன் அளவில் மிக நேர்மையாக வெளிப்படுத்துகிறது. ‘என்ப, மொழிப, என்பனார் புலவர், மொழிந்தனரே, அறைந்தனரே’ போன்ற பல சொற்களால் மிகச்சரியான அகச்சான்றா அவற்றை குறிப்பிடுகிறது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் படி தொல்காப்பியத்தின் காலத்தையே வரையறை செய்யாத நிலையில், என்ப, மொழிப, என்பனார் புலவர், மொழிந்தனரே, அறைந்தனரே போன்ற அகச்சான்றுகளின் காலத்தை எப்போது வரையறை செய்து தமிழ் மரபின் தொன்மையை/ காலப்பழைமையை வரையரை செய்யப்போகின்றோம்.

எமது அடுத்த தலைமுறை சிந்திக்கட்டும்: “ஆய்வு முடிவுகளிலும், விவாதங்களிலும், விமர்சனங்களிலும் கருத்து முரண்கள் ஆரோக்கியக்கிமானவை. மேலேடுத்துச்செல்ல பயனாகுவன. ஏனே எம் முன்னொரும், யாமும் தலைமுறைகளாகத் தொடர்ந்து இவற்றை நிராகரிக்கப் பழகிக்கொண்டோம்; தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறோம்”.

*2: தகடூர் நாட்டில் (தருமபுரி & கிருஷ்ணகி மாவட்டங்கள்) கிடைத்த தொல்பழங்கால பாறை மற்றும் குகை ஓவியங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்துடன் இணைத்துப் பார்க்கப்படுபவை. பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் கொண்டு இவை மு.பொ,ஆ 1000 முற்படாதவை என்ற ஒரு கணிப்பு உண்டு என்பதை மறக்கவியலாது. தகடூர்ப்பகுதி ஓவியங்களில் மிகுதியாகப் பயின்றுவரும் சிந்துவெளி எழுத்துக்களையொத்த எழுத்துக்களும், அவற்றுடன் குறியீடுகள் கலந்து பயின்றுவரும் நிலையும் எழுத்துருக்களின் தோற்றம் வளர்ச்சி பரவல் ஆகியவற்றின் கால கட்டத்துடன் இணைத்து ஆய்வு செய்ய புதிய பல வாய்ப்புக்களை வழங்குகின்றன. இக்கருத்துருவின் அடிப்படையில் தகடூர் நாட்டின் தொல்பழங்கால பாறை மற்றும் குகை ஓவியங்களின் காலப்பழமையை முன்கொண்டு செல்ல முடியும். பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கும் ஓவியங்களும், பாறை மற்றும் குகை ஓவியங்களும் சமகாலத்தின என கணிக்கும் போக்கு மறுபரிசீலனைக்கு உரியதே.

உசாதுணை நூல்கள்:

 1. இளங்குமரனார், “தகடூர் யாத்திரை –மூலமும் உரையும்” (1930) திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 2. இளங்குமரனார், “தகடூர் யாத்திரை (மூலமும் உரையும்)’’, (2009) வளவன் பதிப்பகம். சென்னை.
 3. தி.சுப்பிரமணியன், “தருமபுரி நடுகள் அகழ்வைப்பகம்” (2010), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
 4. பதிற்றுப்பத்து.
 5. மயிலை சீனி.வேங்கடசாமி, ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ (2003), சாரதா பதிப்பகம், சென்னை.
 6. ரா.பி.சேதுப்பிள்ளை. “தமிழகம் ஊரும் பேரும்”, (2008), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
 7. சுந்தரமூர்த்தி நாயனார், தேவாரம் – பொது, திருநாட்டுத்தொகை
 8. நா.மார்க்சிய காந்தி, தமிழக வராலாற்றில் அதியர் மரபு.1998), அமுதன் பதிப்பகம், சென்னை,
 9. இரா.நாகசாமி, தருமபுரி கல்வெட்டுக்கள், முதல் மற்றும் இரண்டாம் தொகுதி, (1975), தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
 10. SII, VOL-Nos: VII, IX.
 11. த.பார்த்திபன், ‘சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும்’ (2009), ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி,
 12. சோகலே, சேலம் மாவட்டம், (1961), பாரி நிலையம், சென்னை,
 13. வே.சா. அருள்ராசு, பழந்தமிழகத்தில் இருப்புத் தொழில், (2000), தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.
 14. வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், (1975), தமிழ்நாட்டு அரசு வெளியீடு, சென்னை.
 15. W.H. Schoff, (Tr), The Peripulus of the Erythrean Sea, (1912), Longmans, Green, and co.,NewYork.
 16. H.Le Fanu, A Manual of Salem District in the Presidency of Madras, (1883).
 17. F.J.Richarts, Salem District Gazetteer, Vol-1; part- I & II (1918),
 18. K.Nileelakanda Sastri, Foernign Notes on South India, University of Madras, Chennai.

***

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>