சங்ககாலத் தகடூர் நாடு

– த.பார்த்திபன்

தமிழக வரலாற்றில், அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சிபுரிந்த சங்ககாலத்திய தகடூர் நாடு எது? அது எந்த அளவிற்குப் பரந்து விரிந்திருந்திருந்தது என்பது தொடர்ந்து விவாதத்திற்கு உரிய பகுதியாகவே உள்ளது. தகடூர் நாட்டின் எல்லைகள் குறித்த பழம்பாடல் எதுவும் கிடைக்காமையால், தகடூர் நாட்டின் எல்லைகுறித்த நம்முன்னோர்களின் கருத்துக்கள் நமக்குத் தெரியவில்லை. “சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, கொங்குமண்டலம், தொண்டைமண்டலம், நடுநாடு”கள் தமக்கான எல்லைகளை வரையறுக்கும் பழம்பாடல்களைக் கொண்டிருக்கின்றன. இவை ஒருசேரக் கிடைப்பதாலேயே இந்நாட்டுப்பிரிவுகள் சங்ககாலம் முதலே இருந்த தமிழக நாட்டுப்பிரிவுகள் என்ற மயக்கம் வரலாற்று ஆசிரியர்களிடையே உண்டு. ஆனால் நாட்டுப்பிரிவு என்பது ஒரு ஆளும் அரசின், குடியின், குலத்தின் அதிகாரம் செல்லுபடியாகும் நிலத்தின் வரையறுத்தப் பரப்பளவினைக் கொண்டது. இதனால், கொங்குமண்டலம், தொண்டைமண்டலம், நடுநாடு ஆகிய பிரிவிகள் தனித்த நாடுகள் என்ற வரையறைக்குள் வருவதில்லை. இம்மூன்று மண்டலங்களுக்குள்ளும் பல்வேறு அரசுகள் தம் அதிகார எல்லையை பகுத்துக் கொண்டு தம்தமது ஆட்சியை செழுத்தியுள்ளன. இதனால் இம்மூன்று பிரிவுகளும் சங்ககாலமுதல் இருந்துவரும் நாடுப்பிரிவுகள் என்பது ஐயத்திற்கிடமானதே.

துவக்க கால ஆய்வுகள் தகடூர் நாடு என்பது இன்றைய தருமபுரி வட்டத்தைச் சார்ந்து அமைந்திருந்த நாடு என்ற கருதப்பட்டது. பின்னர் அதன் பரப்பு இன்றைய தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதியைக் கொண்டுந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆய்வு வளர வளர தகடுர் நாடு இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கியது என்றும், சேலம், நாமக்கல் மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கியது என்றும் தகடூர் நாட்டின் எல்லை விரிவுபடுத்திய ஆய்வு முடிவுகள் வெளியாயின. துவக்ககால கருத்துவ முடிவுகளுக்கு மாறான இந்த ஆய்வு முடிவுகள், தகடூர்நாடு குறித்த மேலாய்வுகளைத் தொடரச்செய்துள்ளன. அண்மைகால த.பார்த்திபன் ஆய்வு கீழ்கண்ட முடிவை முன்வைகிறது.

சங்ககாலத்தின் துவக்கத்தில் தகடூர் நாடு இன்றைய தருமபுரியான தகடூருக்குக் கிழக்கில் இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குஎல்லைவரை விரிந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் இன்றைய கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்து விருதாச்சலம் என்ற முதுகுன்றம் அதியர் மரபினரான “முதுகுன்றம் கண்ணன் எழினி” என்பவனுக்கு உரிமை உடையதாக மாமூலனாரின் 197-வது பாடல் தெரிவிக்கிறது. இந்த “முதுகுன்றம் கண்ணன் எழினி” தகடூருக்கு உரிமையானவனாகச் சொல்லப்படாமையால் இவன் முதுகுன்றத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதியரின் கிளை மரபினன் என்பது விளங்குகிறது. இவனை வீழ்த்தி சோழர் தம் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டதை மாமூலனாரின் மேற்குறிப்பிட்ட பாடலே சான்றாகிறது.

 

இன்றைய விழுப்புரம் மாவட்டத்துத் திருக்கோவிலூர், மலாடு நாட்டுப்பகுதியாக மலையமான் மரபினர் வசம் இருந்துள்ளது தெளிவானது. எனவே இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லை சங்ககாலத் தகடூர் நாட்டின் எல்லையாக இருந்துள்ளது. மேற்குத்திசையில் மைசூர் பீடபூமியின் கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளும், தகடூரின் வடக்கே புன்னாடு வரியிலான அல்லது இன்றைய பெங்களூருப் பகுதியின் மேற்கு மற்றும் வடமேற்கு எல்லைவரை நீண்டுள்ளது. இதில் கோலார் உட்பட்டபகுதிகள் அடங்கியுள்ளன. தெற்கே இன்றைய நாமக்கல் மாவட்டப் பகுதியின் தென் எல்லையும், வடக்கு எல்லையாக வடபெண்ணையும், வடகிழக்கு எல்லையில் காஞ்சிப்பகுதி தொடங்குகிறது என கருதமுடிகிறது.

இந்நிலப்பரப்பினுள் காணமுடிகின்ற கொல்லிமலை ஓரியும், கண்டீரம் நாட்டு நள்ளியும், தகடூர் நாட்டினுள் இருந்த சுதந்திர அரசுகள் அல்லது அதியாமான்களுக்கு அடங்கிய அரசுகளாக இருக்கக்கூடும். இப்பரபினுள் காணும், செங்கன்மா நன்னன் உள்ளிட்ட அரசுகள், அதியமான்களின் வீழ்ச்சிக்குப்பின் தகடூர் நாட்டை சிறுசிறு துண்டுகளாக்கி எழுந்த அரசுகளாகின்றன என்பது வரலாறுப் போக்கிலான நிகழ்வுகளாகும்.

(இக்கட்டுரை த.பார்த்திபனின், சங்ககாலத்தமிழகமும் அதியர் மரபினரும், கிருஷ்ணகிரி மாவட்டம்-சங்ககாலம் மற்றும் ச.செல்வராஜின் தகடூர் நாட்டில் சமணமும் பெளத்தமும் நூலில் அணிந்துரையாக இடம்பெற்ற “தகடூர் நாடு” கட்டுரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.)

****

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>